காந்திநகர் தொகுதியில் அமித் ஷா வேட்புமனு தாக்கல்

காந்திநகர் தொகுதியில் அமித் ஷா வேட்புமனு தாக்கல்
காந்திநகர் தொகுதியில் அமித் ஷா வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு, திறந்தவாகனத்தில் 4 கிலோ மீட்டருக்கு அமித் ஷா ஊர்வலமாகச் சென்றார். அப்போது சாலைகளில் திரண்டிருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்பகல் 2 மணி அளவில் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்ற அமித் ஷா, தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் உடனிருந்தனர். 

காந்திநகர் மக்களவைத் தொகுதியில், 1991ம் ஆண்டு எல்.கே.அத்வானி வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, அமித்ஷா 26 வயது இளைஞராக இருந்தார். அப்போது, அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்சாவில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அத்வானியின் வெற்றிக்காக அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தத் தேர்தலில், அத்வானி 57.97 சதவீதம் வாக்குகள் பெற்று அத்வானி அபார வெற்றி பெற்றார். 

எல்.கே. அத்வானி, தொடர்ந்து 5 முறை காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது அந்தத் தொகுதியில் அமித் ஷா களமிறங்குகிறார். மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் அமித் ஷா, மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கலின் போது அமித்ஷா பேசுகையில், “நாட்டை யார் வழிநடத்தி செல்வது என்பதற்கான போட்டிதான் இந்த தேர்தல். இந்த கேள்வியை நான் கேட்கையில் ஹிமாச்சல் முதல் கன்னியாகுமரி வரை, கம்ரப் முதல் காந்தி நகர் வரை ஒரே பெயர்தான் கேட்கிறது. மோடி..மோடி..மோடி” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com