பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கோவை வந்தடைந்தார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். முதல் முறையாக வந்தபோது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக வந்தபோது திருப்பூரில் அரசின் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அத்துடன் திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் இன்று ஈரோடு வருகிறார். இதற்காக டெல்லியிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார் அமித் ஷா. அவரை கோவை மாவட்ட பாஜக தலைவர் சி.ஆர்.நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அமித் ஷாவை விமான நிலையத்தில் வரவேற்றனர். தொடர்ந்து கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டிற்கு செல்கிறார் அமித் ஷா. அவருடன் முரளிதரராவ்-வும் பயணம் செய்கிறார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பல்வேறு பேச்சுகள் நிலவி வரும் நிலையில், அமித் ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.