“பாஜக போல தமிழின் பெருமையை எக்கட்சியும் காக்கவில்லை” - அமித்ஷா

“பாஜக போல தமிழின் பெருமையை எக்கட்சியும் காக்கவில்லை” - அமித்ஷா
“பாஜக போல தமிழின் பெருமையை எக்கட்சியும் காக்கவில்லை” - அமித்ஷா

தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவைப் போல வேறு எந்தக் கட்சியும் செயல்படவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பாஜகவின் வாக்குச்சாவடி நிலையிலான பொறுப்பாளர்கள் முன்னிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசினார். அப்போது, “தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும். கூட்டத்தில் பாஜகவின் வாக்குச்சாவடி நிலையிலான பொறுப்பாளர்கள் 16 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம். மார்ச் மாதத்திற்குள் பாஜக எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். 2014ல் தமிழக மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு தெரிவித்த ஆதரவுக்காக தமிழர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன். 10 கோடி ஏழை மக்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பணியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மோடி அரசின் மக்கள் சேவையினால் பாஜக மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது. 19 மாநிலங்கள், 350க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 1100க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ள கட்சி பாஜக. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்திருக்கிறது. முந்தைய அரசுகளை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது மோடி அரசு. நீர்ப்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ திட்டம், சென்னை மோனோ ரயில் திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு வறட்சிக்காகவும், வர்தா புயல் நிவாரணத்திற்காகவும் நிதி ஒதுக்கப்பட்டது. 1,445 திட்டங்கள் மூலம் 3,067 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1,500 கோடி ரூபாய் தமிழகத்திற்கு தரப்பட்டுள்ளது. 3,300 கோடி ரூபாய் அம்ருத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு தரப்பட்டுள்ளது. சாதி வாதம், வாரிசு அரசியல், ஊழலை மோடி அரசு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டுவர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவைப் போல வேறு எந்தக் கட்சியும் செயல்படவில்லை” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com