அதிமுக விவகாரம்: தினகரன் தரப்பில் ஆவணங்கள் தாக்கல்
அதிமுக கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் இன்று 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுகவில் பெரும்பான்மை உள்ள தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இரு இருதரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஆவணங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது.
ஆனால் ஆவணங்களை அளிக்க கூடுதல் காலஅவகாசம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அளித்தார். மேலும் ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணிகள் இணைந்து கடந்த 29ஆம் தேதி தாக்கல் செய்த ஆவணங்களில், பலரிடம் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதாக ராஜா செந்தூர்பாண்டியன் குற்றம்சாட்டினார்.