ராகுல் இடத்தை நிரப்ப ஆற்றல்மிக்க இளைஞர் தலைவராக வேண்டும் - அமரிந்தர் சிங்
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திக்கு பிறகு ஒரு இளம் தலைவரே வரவேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தாம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார்.
மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அத்துடன் தனது ராஜினாமா குறித்தும் விரிவான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனத் ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தியின் ராஜினாமாவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாற்றத்தை தரக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு இளைஞர் தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும். எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இளம் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களிடம் நல்ல தொடர்பை வளர்க்க ஒரு இளம் தலைவரை நியமிக்க முடிவு எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.