தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது: அதிமுக திட்டவட்டம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது: அதிமுக திட்டவட்டம்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது: அதிமுக திட்டவட்டம்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அதிமுக. 

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு என பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கின்றன.

குறிப்பாக அதிமுக ஒருபடி மேலே சென்று, தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘’சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளாக இருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், ஒருவேளை வெற்றி பெறும் பட்சத்தில் பாஜகவுடன் அதிமுக ஆட்சியை பகிர்ந்து கொள்ளுமா என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அதிமுக அதற்கு விளக்கமளித்துள்ளது.

அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘’தமிழக மக்கள் எப்போதுமே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை அமைந்ததும் இல்லை, இனி அமையப் போவதும் இல்லை.

அது காங்கிரசாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் எப்போதும் ஆட்சியமைத்தது ஒரே ஒரு கட்சிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.

2006 ஆம் ஆண்டில், திமுகவுக்கு 96 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கிடைத்தபோது, திமுகவே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதன் முக்கிய தோழமை கட்சியான காங்கிரஸுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கூட்டணி எப்போதுமே தேர்தல்களுக்காகவே இருந்துள்ளது. எதிர்காலத்திலும் தமிழகம் ஒரு கூட்டணி ஆட்சியைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com