பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவம்: பிரதமர் மோடி
இந்தியாவில் பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவமாகவே பார்க்கப்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் பெண்கள் அனைவரும் சக்தியின் வடிமாகவே பார்க்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தேச நலனுக்கு அவசியம் என்றார். தொழில்முனைவோரையும் கண்டுபிடிப்பாளர்களையும் அதிகமாகக் கொண்ட நாடு இந்தியா எனவும் அவர் கூறினார்.
"இளைய தொழில் முனைவோர் ஒவ்வொருவரும் புதிய இந்தியா 2022ஐ படைப்பதற்கான திறனைப் பெற்றிருக்கிறார்கள். பீம் செயலி மூலம் நாளொன்றுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் வரவு செலவு நடக்கிறது. ஆதார் திட்டத்தில் 1.15 பில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் நான்கு கோடி டிஜிட்டல் மூலமான வரவு செலவு நடக்கிறது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம், புதிய ஸ்டார்ட் அப் தொழில்களுக்கு உதவும் ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வைத்திருக்கிறது. குழந்தைகளிடம் கண்டுபிடிப்புத் திறனை வளர்ப்பதற்கு 900 பரிசோதனைக் கூடங்களுடன் கூடிய திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்" என்று மோடி குறிப்பிட்டார்.
ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 2018ல் 580 மில்லினாக உயரும் என்று கூறிய மோடி அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகும் என்றார். இந்தியாவில் தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.