அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டியது தனது கடமை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர், கட்சியில் தான் யாருக்கும் போட்டியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியை பலப்படுத்துவதற்காகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் வரும் 4ம் தேதிக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இணைப்பு சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவி அம்மா அணி அமைப்பு ரீதியாக வலுவான அணி என்றும், தொண்டர்களின் ஆதரவு ஓ பன்னீர்செல்வத்திற்கே அதிகம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

