அதிமுக அணிகள் இணைப்பில் இப்போதைய பரபரப்பு இதுதான்!
அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக திரைமறைவில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு உள்துறை பொறுப்புடன் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் மற்றும் நிதி மற்றும் பொதுப்பணித்துறையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பது அந்த அணியினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் கட்சியை வழிநடத்தும் குழுவின் தலைவராக ஓபிஎஸ் இருக்க வேண்டும் என்றும் 9 பேர் கொண்ட குழுவில் 5 பேர் தங்களது அணியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாகும்.
இதில் துணை முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்க எடப்பாடி பழனிசாமி அணி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் வழிநடத்தும் குழுவுக்கு இருவரும் தலைமை வகிக்கலாம் என முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிதி அமைச்சர் பொறுப்பும் பொதுப்பணித்துறைக்குப் பதிலாக வேறு அமைச்சர் பொறுப்பும் வழங்க ஈபிஎஸ் அணி ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இரு அணிகளும் இணைய முடிவெடுத்தால் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தினகரன் அணியினர் உரிமை கோர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.