திமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்
முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் இருவரும் டெண்டர் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தனர்.
“லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதே தவறு. அதனால், முதல்வர் மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்.
வழக்கமான டெண்டர் வேறு, ஏனோடிக் டெண்டர் வேறு. இதில், சர்வதேச வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதலின்படி தான் எல்லாம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. சாலை போடுவதற்கும், பராமரிப்பதற்கும் சேர்த்தே டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில்தான் அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதை விட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அதிக விலையில் டெண்டர் விட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. விதிமுறைகளுக்கு மீறி எந்த உறவினருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை. உறவினர் என்றால் ரத்த உறவுகளையே குறிக்கும். உரிய விதிமுறைகளை பின்பற்றியே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.