அதிமுகவில் நீடிக்கும் சிக்கல்: பின்வாங்குகிறாரா ஆளுநர்?

அதிமுகவில் நீடிக்கும் சிக்கல்: பின்வாங்குகிறாரா ஆளுநர்?
அதிமுகவில் நீடிக்கும் சிக்கல்: பின்வாங்குகிறாரா ஆளுநர்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக ஆளுநரிடம் 19 அதிமுக எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்திருந்த நிலையில், இதுவரை அவரது நிலைப்பாடு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநரை சந்தித்தபின் அளித்த பேட்டியின் மூலம் ஆளுநரின் கருத்து தெரியவந்துள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22 ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்தனர். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை திரும்பப்பெறுவதாக அவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இனி ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்‌பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.‌ இச்சூழலில் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்து பேசினர். அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்புக்குப் பின் பேசிய திருமாவளவன், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் வி‌வகாரத்தில் தலையிட முடியாது என்று ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். தற்போதைய சூழலில் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என்றும் சட்டம் அதற்கு இடம் தரவில்லை என்றும் ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், “19 எம்எல்ஏக்களும் அதிமுகவினர் தான் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் சட்டப்படி அதிமுக உறுப்பினராக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கருத முடியாது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது வேறு கட்சியில் இணைந்தாலோ அது சட்டச் சிக்கலாகும். அவர்களுக்கு இடையில் இரு குழுக்களாக பிரிந்து சண்டை போடுகிறார்கள். இதில் நாங்கள் தலையிட முடியாது” என்று ஆளுநர் தன்னிடம் தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார்.

எனினும் முதலமைச்சரை நீக்கக்கோரி 19 எம்எல்ஏக்கள் அளித்த மனுக்கள் மீது ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு நாளில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிவிப்போம் எனவும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகவே மத்தியில் ஆளும் பாஜக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலையை மீட்க டெல்லியில் அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com