மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக-விற்கு இடம் இல்லை?
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதில் அதிமுகவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா உயர் மட்டத் தலைவர்கள் இத்தகவலை கூறியுள்ளனர்.
மத்திய அமைச்சரவையியில் இடம்பெற்றிருந்த வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் விலகியதாலும் அனில் மாதவ் தவே காலமானதாலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அருண் ஜேட்லி, ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன் ஆகியோர் கூடுதல் துறைகளை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். விரிவாக்கம் செய்யப்படும் மத்திய அமைச்சரவையில் அதிமுக-வும் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அதிமுக-விற்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என பாரதிய ஜனதா உயர்மட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக அணிகள் இணைப்பிற்கு பின்பே அக்கட்சியை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து யோசிக்கப்படும் என்றும் அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, குஜராத் மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால் அம்மாநிலங்களை சேர்ந்தோருக்கே அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழக அரசை மத்திய பாஜக அரசு பின்னிருந்து இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுக-விற்கு இடம் இல்லை என தெரியவந்துள்ளது.