கொரோனா காலத்தில் உதவிய திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி
கொரோனா காலத்தில் அதிமுக தொண்டருக்கு செய்த உதவி தேர்தல் காலத்தில் திமுக வேட்பாளருக்கு பலன் அளித்தது. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள தென்னாங்கூர் கிராமத்தில் வசிப்பவர் அதிமுகவைச் சேர்ந்த செல்வகுமார். அதிமுக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளரான இவருக்கு அப்போது எம்எல்ஏவாக இருந்த அம்பேத்குமார் (இப்போதைய திமுக வேட்பாளார்) கொரோனா காலத்தில் உதவி செய்துள்ளார். அந்த உதவி இப்போது தேர்தல் களத்தில் நெகிழ்ச்சியான சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் தென்னாங்கூர் கிராமத்தில் திறந்த வேனில் பரப்புரை செய்து கொண்டிருந்தார். அப்போது மாற்றுத்திறனாளியான செல்வகுமார், திமுக வேட்பாளரை செல்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்ந்து தெரிவித்தார்.
உடனடியாக நேரில் வந்த திமுக வேட்பாளர் அம்பேத்குமாரிடம், செல்வகுமார் கொரோனா காலத்தில் நான் நிவாரணம் கேட்டேன். ஆனால், எனக்கு மட்டுமல்ல பல குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கி உதவி செய்தீர்கள் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த முறையும் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். இச்சம்பவம் அங்கு இருந்தவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.