“அதிமுக- பாஜக மெகா கூட்டணி 90% உறுதி” - பியூஷ் கோயலை சந்தித்த ஜெயானந்த் பேட்டி
தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்திலும் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி குறித்து பேச்சு பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்துள்ளன.
காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டோருடன் திமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி குறித்து அதிமுக தரப்பில் இதுவரை உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இத்தகைய பரபரப்பான சூழலில் திவாகரன் மகன் ஜெயானந்த் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சென்னையில் இன்று சந்தித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், அவருடைய சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து புதிய தலைமுறைக்கு இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம் உள்ளிட்டவைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்படையும் வகையில் எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார். அதிமுக-பாஜக கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
மேலும், “அதிமுக தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா உள்ள போது இருந்ததைபோன்ற வலிமையான ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள்” என்றார்.
அதோடு, அதிமுகவுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது நடைபெறும் என்றும் அவர் கூறினார்.