கொடி ஏற்றுவதில் அதிமுக-திமுக இடையே தள்ளுமுள்ளு... போலீஸ் தடியடி...
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கட்சி கொடி ஏற்றுவதில் போட்டி ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு அனுமதி அளித்த போலீசார், 200 பேர் மட்டுமே கூட வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மைக் அமைக்க அனுமதி கிடையாது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்காக அதிமுகவினரும் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தாலும் தடையை மீறி அதிமுகவினர் கொடி ஏற்றுவதற்கு தயாராக இருந்துள்ளனர். மேலும், பேருந்து நிலையம் முன்பு இரு கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர்.
அப்போது இரு கட்சியினருக்கும் இடையே சாலையோரத்தில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி கோபி தலைமையில், டிஎஸ்பிக்கள் சங்கர், கலைக்கதிரவன் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்டு அங்கிருந்த அதிமுகவினரை அப்புறப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர் சூரங்குடி சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், போலீசார் சிறிது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் போலீசாருடன் எம்எல்ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், போலீசாரை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து கோஷங்களை முழங்கினர். இதற்கிடையே நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திமுகவினர் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து அதிமுகவினர் சின்னப்பன் எம்எல்ஏ தலைமையில் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி கோபி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தகவலறிந்து அங்கு வந்த நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள அதிமுக கொடி கம்பத்தில் சின்னப்பன் எம்எல்ஏ கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பதற்றம் நிலவியது. தள்ளுமுள்ளுவில் டி.எஸ்.பி கலைகதிரவனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.