“மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு முதல்வர் பதவி?” - தொகுதி உடன்பாடு
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டு முறையே 122 - 63 இடங்களை கைப்பற்றினர். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதேபோல், இந்த ஆண்டும், கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக இழுபறியுடன் நடந்து வந்தது.
இந்நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 மற்றும் சிவசேனா 126 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டலாம் எனத் தெரிகிறது. மீதமுள்ள 18 தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. கூட்டணி ஒப்பந்தப்படி பாஜகவுக்கு முதல்வர் பதவியும், சிவசேனா கட்சி தலைவர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்படும். அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.