ஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை
வெற்றி பெறுவதற்கான வாக்குகள் வேண்டுமென்றால், ஏழை குழந்தைகளை தத்தெடுங்கள் என்று பாஜக தலைவர்களுக்கு மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் கூறியுள்ளார்.
குஜராத் மாநில முன்னாள் முதல்வரான ஆனந்தி பென் பட்டேல் இதுதொடர்பான பேசிய வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், விமான ஓடுதளம் ஒன்றின் அருகில் பாஜக தலைவர்களுடன் ஆனந்தி பென் நின்றபடி உரையாடிக் கொண்டிருக்கிறார். வாக்குகளை சேகரிப்பது எப்படி என்று பாஜக தலைவர்களுக்கு அவர் அறிவுரை வழங்குகிறார். அப்போது, “ஏழை மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளை தத்தெடுக்கும் போதுமட்டும் தான் உங்களால் வாக்குகளை பெற முடியும். பிரதமர் மோடியின் 2022ம் ஆண்டு செயல் திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் விரும்பினால் இதனை செய்யுங்கள்” என்று அவர் கூறுகிறார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒவ்வொரு கிராமமாக செல்லுங்கள். ஏழைக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களை உங்கள் வளையத்திற்கு கொண்டு வாருங்கள். அவர்களிடம் அன்பாக இருங்கள். உங்களுக்கு ஓட்டுகள் வேண்டுமென்றால் அவர்களை தத்தெடுத்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுங்கள். எளிதில் உங்களால் ஓட்டுகளை பெற முடியாது” என்று கூறினார். ஆனந்தி பென் பேசுவதை அருகில் இருந்த பாஜக தலைவர்கள் கூர்ந்து கவனித்தார்கள். வீடியோவில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனந்தி பென் பட்டேலின் இந்தக் கருத்து சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. வாக்குக்கான தனது அரசியல் சாசன பதவியை ஆனந்தி பென் தவறாக பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இதுகுறித்து பாராளுமன்றத்திற்கு கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்துள்ளது.