
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு நாளை மறுதினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் இன்று ஆறாவது கட்டமாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வதிற்கு ஆதரவாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் விதிகளின்படி அனைத்து அதிகாரங்களும் பொதுச்செயலாளருக்கே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் 9 மாதங்களுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிடிவி தினகரன் தரப்பு வாதம் முடிவடைந்துள்ள நிலையில் நாளை மறுதினம் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.