சபாநாயகர் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன்
சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தங்களை கட்டுப்படுத்தாது என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அரசு கொறாடா பரிந்துரை பேரில் 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது தொடர்பாக பேரவைச்செயலாளரிடம் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் விளக்கம் அளித்துள்ளனர். புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சார்பாக தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் பேரவைச்செயலாளரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தார்கள். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வன், எந்த விதத்திலும் இந்த நோட்டீஸ் எங்களைக் கட்டுப்படுத்தாது. சட்டப்படி, முறைப்படி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. இதைப் பொருத்து எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. துணைப்பொதுச்செயலாளரை சந்தித்து அடுத்த கட்டமாக ஜனாதிபதியை பார்ப்பது குறித்து எங்கள் நகர்வு இருக்கும் என்று கூறினார்.
வெற்றிவேல் கூறும்போது, எங்களுக்கும் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பொதுக்குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி அழைத்தால் நாங்கள் செல்லவே மாட்டோம். சென்ற கூட்டத்திற்கு அவர்கள் எங்களை ஏன் அழைக்கவில்லை. அதற்கு அவர்கள் முதலில் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் இந்தக் கட்சியை அழிப்பதற்காக இல்லை, கட்சியை நடுரோட்டிலும் விடமாட்டோம். அவர்கள் துவங்கியது இந்த ஆட்டம், அவர்கள் தான் முடிக்க வேண்டும், நாங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமாலும் முடித்துவிடுவோம் என்றார்.