துணைவேந்தர் ஊழலில் அமைச்சர்களுக்கு பங்கு இல்லை: அதிமுக விளக்கம்!
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர்களுக்கு பங்கு இல்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டது குறித்து, உயர் கல்வித்துறை ஆளுநரிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையே துணைவேந்தர் விவகாரத்தில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றாச்சாட்டுகளை எழுப்பின.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், துணைவேந்தர் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிமுக அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள், முற்றிலும் தவறானது என்று கூறினார். மேலும் இதனை கடுமையாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார். வடபழனியிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.