பாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்? குருமூர்த்திக்கு அதிமுக கேள்வி!
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி, தினகரன் ஆதரவாளர்கள் மீது காலங்கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என தெரிவித்திருந்தார். இருவரையும் திராணியற்றவர்கள் என பொருள்படும் விதமாக கடுமையான சொல் ஒன்றையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள சிங்கை ராமச்சந்திரன், மற்றவர்களை ஆண்மையற்றவர்கள் என விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தி வாழ்வில் என்ன சாதித்திருக்கிறார் எனக் கேள்வியெழுப்பி உள்ளார். தமிழகத்தில் நோட்டாவை விட பாரதிய ஜனதா ஏன் குறைவான வாக்குகள் வாங்கியது என்பது குறித்து குருமூர்த்தி கூற முடியுமா எனவும் அவர் வினா எழுப்பியுள்ளார். குருமூர்த்தியோ, பாரதிய ஜனதாவோ தனித்து நிற்கும் போது எத்தனை பேர் தமிழகத்தில் ஆதரவளிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியுமா என்றும் கூறியுள்ளார். திறனாய்வாளர் போன்று குருமூர்த்தி காட்டிக் கொள்வதால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.