“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு

“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு

“தமிழகத்திற்கான 10 ஆயிரம் கோடி நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை” - மக்களவையில் தம்பிரை பேச்சு
Published on

ஜெயலலிதா காலம் முதலே தமிழகத்திற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளதாக மத்திய அரசு மீது அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான உரை குறித்து அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைபோன்று உள்ளது என்று தெரிவித்தார். 

தம்பிதுரை பேச்சின் முக்கிய அம்சங்கள்:- 

  • “விவசாயிகளுக்கு குறைந்தது 12 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018ஆம் ஆண்டு அறிவிக்கவில்லை. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்தது சரியல்ல. 
  • மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா ஆகிய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேட் இன் இந்தியா என கூறுகிறீர்கள். ஆனால், சீனப் பட்டாசுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பங்களாதேஷில் இருந்து துணிகள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நம்நாட்டு பொருட்களின் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது.
  • பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது ? பணப் புழக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது.
  • சிறுபான்மையினர் நலனுக்காக போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கட்டப்பட்ட பல கழிவறைகள் பெண்கள் அணுக முடியாத நிலையில் உள்ளன. நூறுநாள் வேலைத் திட்டத்தின் கொள்கையை மாற்றியது மிகப்பெரிய தோல்வியில் முடிந்துள்ளது.
  • மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. ஜெயலலிதா இருந்த போது முதல் தற்போது வரை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய 10 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தானே, வர்தா, ஒகி, கஜா  புயல்களால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை” என்றார். 

ஏற்கெனவே ரஃபேல் ஊழல், 10 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்ற விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை மிகவும் காட்டமாக பேசி இருந்தார். அதிமுக பாஜக இடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மக்களவையில் தம்பிதுரை மத்திய அரசின் மீது விமர்சனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com