திருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்துவிற்கு வழக்கம்: மைத்ரேயன் சாடல்
பக்திக் கடலில் கவிஞர் வைரமுத்து கல் எறிந்துவிட்டதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து வாசித்தக் கட்டுரைக்கு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, மைத்ரேயன் இணைந்துள்ளார். மைத்ரேயன் தனது பேஸ் புக் பக்கத்தில் வைரமுத்துவின் கட்டுரையை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“கவிஞர் வைரமுத்து தன் பரபரப்பான கட்டுரை மூலம் பக்திக் கடலில் கல் எறிந்து பார்த்திருக்கிறார். காதல் இலக்கியத்தில் பக்தியைக் குழைத்து ஆண்டாள் வழங்கிய கவிதைகள் திவ்யப் பிரபந்தத்தில் தனித்துவம் மிக்க பகுதியாகும். தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் டாக்டர் பூவண்ணன் ஆண்டாளைப் பற்றி குறிப்பிடும்போது வேயர் பயந்த விளக்காம் ஆண்டாள் மாயனை நயந்து பாடிய நாச்சியார் திருமொழி, அரங்கனிடம் கொண்ட அணை கடந்த காதல் வெள்ளம் எனப் பாராட்டியுள்ளார்.
" மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் காண்பாய் மன்மதனே " என்று பாடிய ஆண்டாளை பொதுமகள் நிலைக்கு தரம் தாழ்த்துவது காதல் சிறப்பு உணர்ந்த கவிஞரின் தகுதிக்குப் பொருந்தாது. அவரே ஒரு விரிவான, மனப்பூர்வமான மறுப்பு அறிக்கை தருவதுதான் சிறந்தது. திருத்தி எழுதிய தீர்ப்புகள் அவருக்கு வழக்கம்தானே” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து வருத்தம் தெரிவித்ததை ஹெச்.ராஜா வரவேற்று பேட்டி அளித்ததால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால், மைத்ரேயன் அந்தப் பிரச்னையை மீண்டும் எடுத்துள்ளார்.