காவிரிக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆளும் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தலைமை தாங்கியுள்ளனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் இதுவரை போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆளும்கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.