தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு?

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு?
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு?

கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு 5 தொகுதிகளையும் புதிய தமிழகம் கட்சி ஒரு தொகுதியும் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும் என்.ஆர். காங்கிரஸுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 25 தொகுதிகளை அதிமுக கையில் வைத்துள்ள நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இழுப்பறி நிலையில் உள்ளது. 

இந்த சூழலில் இன்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் இடம்பெறவில்லை.

இதனால் இன்று பிரதமர் மோடி வருவதற்கு முன்பே எப்படியாவது தேமுதிக கூட்டணியை முடிவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேமுதிகவிற்கு  4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால் தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்குவதே இழுப்பறிக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இதுகுறித்து முதலமைச்சர் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். தேமுதிக அலுவலகத்தில் அவர்களது நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com