3 அணிகளாக சிதறிய அதிமுக: உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்
அதிமுகவில் நிலவும் உச்சக்கட்ட குழப்பத்தால் அக்கட்சியின் தொண்டர்கள் ஒருசேர குழப்பமும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தங்களுக்கென தனி பாதை வகுத்துக்கொண்டனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் முகாமில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வத்தின் பாணியை பின்பற்ற தொடங்கியுள்ளார். டிடிவி தினகரனுடன் இணக்கமாக இருந்த அமைச்சர்கள், அவர்மீது சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்த பின்னர் பாதை மாறத் தொடங்கினர்.
அமைச்சர்களின் புறக்கணிப்பு காரணமாக 2 மாதம் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்த டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ளார். இப்படி அதிமுகவுக்குள்ளேயே 3 அணிகள் உருவாகி மாலுமி இல்லாத கப்பலைப்போல் தத்தளிப்பது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
இதனிடையே, ஆகஸ்ட் 4 ஆம் தேதி டிடிவி தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏ.கே.போஸ், சத்தியா பன்னீர்செல்வம் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு புதிய பதவி தேவையில்லை எனக்கூறி அவருக்கு அதிர்ச்சியளித்துள்ளனர். அதிமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளும், குழப்பமான சூழலும் அதிமுக தொண்டர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.