தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தனது மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் விஷால் புகார் மனு அளித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், தீபா உட்பட 73பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. தன்னை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக இடம்பெற்றுள்ளதாக கூறி விஷாலின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் புகார் மனுவை அளித்தார். அப்போது, வேட்புமனு பரிசீலனையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் விளக்கினார். மேலும், வேட்புமனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக லக்கானியிடம் முறையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து ஆதராங்களுடன் புகாரை லக்கானியிடம் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.