ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் உள்ளிட்ட 54 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட விஷால், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார்.
இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் ஏன் இப்படி செய்தீர்கள் வேலு என்று விஷால் கேட்கிறார். அதற்கு மறு முனையில் பேசும் வேலு, மதுசூதனன் ஆதரவாளர்கள் தனது குடும்பத்தினரை அழைத்துச் சென்று மிரட்டியதாக கூறுகிறார். அதற்கு எங்கு கொண்டு சென்றார் என்பதை தெளிவாக கூறும்படி விஷால் வலியுறுத்துகிறார். மதுசூதனன் தரப்பைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டு பெண்களை மிரட்டியதாகவும், தனக்கு பணம் கொடுக்க முயன்றதாகவும் வேலு கூறுகிறார்.
ஆனால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆடியோவில் வேலு புகாருக்கு உள்ளான மதுசூதனன் தரப்பை சேர்ந்த ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், விஷால் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

