சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரியோ.. வெளுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. பின்னணி என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளாாகவும், சீரியல் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கிய ரியோ ராஜ், ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு, ’பிளான் பண்ணி பண்ணணும்’, ’ஜோ’, ’ஸ்வீட் ஹார்ட்’, ’ஆண் பாவம் பொல்லாதது’ ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது ’ராம் அன்ட் லீலா’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
கடந்த 21-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக, Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், ’ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம் பெண்ணியவாதிகளிடம் கிளம்பிய எதிர்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ”பெண்ணியவாதிகளை நாங்கள் அந்த திரைப்படத்தில் விமர்சனம் செய்யவில்லை. பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாமல், அதுகுறித்து கருத்து கூறும் பெண்களைப் பற்றிதான் அந்தப் படம் பேசியது” என்று தெரிவித்தார். தொடர்ந்து, ”எனது தாய்தான் மிகவும் தைரியமான பெண். தனி ஆளாக நின்று என்னைப் படிக்கவைத்தார். அவர் பெண்ணியம் பேசவில்லை. பெண்ணியவாதியாக வாழ்ந்து காட்டினார்” என்று ரியோ கூறி முடிப்பதற்குள், ”பெண்களின் வலிமையை தாய்மைக்குள் மட்டுமே ஏன் புகுத்துகிறீர்கள். அதுமட்டும்தான் வலிமையா” என்று தொகுப்பாளர் குறுக்கே கேள்வி எழுப்பினார்.
உடனே இதற்குப் பதில் அளித்த ரியோ, பெண்ணியம் என்பது ஒரு உணர்வு. தனது கொள்கைகளில், முடிவுகளில் அழுத்தமாக நிற்கும் அனைத்துப் பெண்களும் தைரியமானவர்களதான் என்று பதிலைச் சற்று மாற்றிக் கூறினார். தொடர்ந்து மற்றொரு வீடியோவில், ஒரு பெண் விவாகரத்து கேட்டு காவல்நிலையம் சென்றால், அங்கு ஆணதான் குற்றவாளிபோல நடத்தப்படுகிறார். பெண்ணியம் என்பது ஓர் உணர்வுதான். அதற்கு வரையரையோ, கோட்பாடோ கிடையாது” என்று கூறினார்.
பெண்கள் சிலர் சட்டம் தங்களுக்கு வழங்கிய பாதுகாப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதனாலதான், விவாகரத்து வழக்குகளில் ஆண்கள் குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள் என்று ஒரு தரப்பு, ரியோவுக்கு ஆதரவாக கருத்து கூறுகின்றனர்.
மற்றொரு பக்கம், வரலாற்றுரீதியாக ஆண்கள்தான் அதிக குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். குற்றங்களில் ஆண்களின் பங்குதான் அதிகம். அதற்குப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் எப்படி பொறுப்பாக முடியும் என்றும், பெண்ணியம் குறித்த ரியோ ராஜின் புரிதல் என்பது தவறு. பெண்ணியம் ஒரு சமூக இயக்கம் என்றும், எதிரான கமெண்ட்களும் எழுந்துள்ளது. இவ்வாறு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர ரியோ ராஜின் தற்போதை வீடியோக்கு கிடைத்திருக்கிறது.

