காங். சமூக வலைத்தளங்களில் செயல்பட 85% பெண்களை நிரப்பிய ரம்யா
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் செயல்பட 85 சதவிகிதம் பெண்களை நியமித்துள்ளார், நடிகையும் அக்கட்சியின் சமூக வலைத்தளப் பிரிவின் தலைவருமான ரம்யா.
நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளப் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து, பாஜகவை விமர்சிக்கும் செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகிறார். கர்நாடகாவின் மாண்டியா தொகுதியின் மக்களவை உறுப்பினாராக பதவி வகித்த இவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா, பின்னர் தனது பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளங்களை பலப்படுத்தும் நோக்கத்தில் பல புதிய திட்டங்களையும், முறைகளையும் ரம்யா கையாண்டு வருகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இணையும் முன்பே ரம்யா ட்விட்டரில் பிரபலமாக இருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் உள்ளிட்ட காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் 85% பெண்களை அவர் பணியமர்த்தியுள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள ரம்யா, “பெண்கள் புதுமையாக சிந்திக்கும் தன்மையுடையவர்கள், அவர்கள் திறனுடனும், பெண்களின் எண்ணங்களை மையமாக கொண்டும் செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளார். பாஜகவினரை, குறிப்பாக பிரதமர் உள்ளிட்டவர்களை நேரடியாகவும், தனிப்பட்ட வகையிலும் விமர்சிக்காமல், அவர்களது அரசியல் செயல்களை சிரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். சமீப காலமாக காங்கிரஸின் சமூக வலைத்தளங்கள், பாஜகவின் மறைக்கப்பட்ட குற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதகாவும், இது பாஜகவிற்கு எரிச்சல் அளிக்கும் வகையில் உள்ளதாகவும் ரம்யா கூறினார். ரம்யா காங்கிரஸின் சமூக வலைத்தளங்கள் குழுவில் இணையும்போது 3 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 85 சதவிகிதம் பெண்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.