நாளை தூத்துக்குடி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இதற்காக நாளை காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் துத்துக்குடி செல்ல உள்ளார். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதல் முறையாக, மக்கள் பிரச்னைக்கு நடிகர் ரஜினிகாந்த் களமிறங்க உள்ளார்.

