‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்: ஜெயக்குமார் விமர்சனம்
‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும் என நடிகர் ரஜினிகாந்த் மீது அமைச்சர் ஜெயக்குமார் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் இணையத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. பாடல்கள் இணையத்தில் வெளியாகினாலும் இன்று மாலை இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும் என தெரிவித்தார். திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது என எச்சரித்த அமைச்சர், காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.