200 ஆண்டுகளுக்கு பாஜகவால் தமிழகத்தில் வர முடியாது: ராதாரவி
பாஜகவால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் வர முடியாது என்பது தெரிந்தும் போட்டியிட்டது தவறு என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. 4வது சுற்று முடிவு வரை டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 9,672 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மதுசூதனனை விட இதுவரை டிடிவி தினகரன் 10,626 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் முன்னிலை பெற்று வரும் டிடிவி தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ஆளும் கட்சியான அதிமுக பின்னடைவை சந்தித்திருப்பது மக்களுக்கு ஆளும் கட்சி மீதான அதிருப்தியை, நம்பிக்கையின்மையையே தெரிவிக்கிறது. அவர்களுக்கு இதைவிட அவமானம் இருக்க முடியாது. பாஜகவால் இன்னும் 200 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் வர முடியாது என்பது தெரிந்தும் போட்டியிட்டது தவறு. விஷாலை போலவே பாஜகவின் போட்டியிடும் முடிவும் மிகவும் தவறானது” என தெரிவித்தார்.