ஆண்டவன் செயலல்ல, ஆள்பவர் செயல்: கமல் புதிய ட்விட்
நம்பியர்கள் கைவிடப்பட்டது மக்கள் நம்பும் ஆண்டவனின் செயல் அல்ல, மக்களை ஆளும் ஆட்சியாளர்களின் செயல் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களையும், அரசின் குறைகளையும் தெரிவித்து வருகிறார். அத்துடன் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது பிறந்தநாளான கடந்த 7ஆம் தேதி அன்று மையம் விசில் என்ற செயலியை மக்கள் கருத்துக்களை பெறுவதற்கு தொடங்கியுள்ளார். அவரது இந்த ட்விட்டர் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதிமுகவினருக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கமல் ட்விட்டில் ஆதாரம் இல்லை என்றால் வழக்கு தொடருவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என்று தெரிவித்துள்ளார்.

