கமல்ஹாசனிடம் கருணாநிதி கூறியது என்ன? கமல் பேட்டி!
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அரசியல் களத்தில் வரும் 21ஆம் இறங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் கமல் சந்தித்தார். பின்னர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், “மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறேன். அந்த வகையில் தற்போது கருணாநிதியை சந்தித்திருக்கிறேன். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கையில் என் கொள்கையில் திராவிடம் இருக்காமல் போகுமா? இருக்கும். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்களின் மீதான அக்கறை ஆகியவை நான் கற்றுக்கொள்ள வேண்டியவை. இவை பலரிடம் இருந்தாலும், அவரிடம் தனித்தன்மை இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான் சிறுவயது முதலே குரல் கொடுத்து வருகிறேன். ஆட்சியை பிடிப்பதில் திமுகவிற்கு ஒரு கனவு உள்ளது. எனக்கு ஒரு கனவு உள்ளது. என்னுடைய கொள்கையை திமுக தெரிந்து கொண்ட பிறகு, அவர்களுக்கும், எனக்கும் சரி என்று பட்டால் எதிர்காலத்தில் கூட்டணி குறித்து முடிவுசெய்வோம். நான் அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் சேவைக்காகத்தான். களத்தில் யாரையும் எதிர்கொள்ளவோ அல்லது யாரையும் அசைக்கவோ இல்லை. எனது பாணியை 21ஆம் தேதி அறிவிப்பேன். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த போது, அவர் எனக்கு வாழ்த்து கூறினார்” என்று தெரிவித்தார்.