‘படிக்கிற பசங்களுக்கு அரசியல் தெரியனும்’ ரஜினியை உரசிய கமல்!

‘படிக்கிற பசங்களுக்கு அரசியல் தெரியனும்’ ரஜினியை உரசிய கமல்!
‘படிக்கிற பசங்களுக்கு அரசியல் தெரியனும்’ ரஜினியை உரசிய கமல்!

மாணவர்கள் அரசியல்வாதிகள் ஆக வேண்டாம், அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும் என எம்என்எம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “நான் சினிமா நடித்தேன். அதை நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தீர்கள். அது கொடுக்கல் வாங்கல். இனி கடமையை செய்யும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். இனி இது கொடுக்கல் வாங்கலாக இருக்காது. நான் செய்யவேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்ய வேண்டிய ஒரு கடமைக் குடும்பமாக இனி இருக்கப்போகிறோம். 

மாணவர்களே விழித்திருங்கள். படிப்பு மிக முக்கியம். நீங்கள் படித்து முடித்ததும் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான். அதை எதிர்கொள்ள நீங்கள் அரசியல்வாதியாக இருக்க வேண்டாம். ஆனால் அரசியல் புரிந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசியல்வாதிகள் நல்லமுறையில் செயல்பட வேண்டிய நிலைக்கு மாறும் நிலை உண்டாகும். படிக்கின்ற பசங்கள் நீங்கள், படித்துக்கொண்டே இருங்கள் என சொல்வார்கள். படித்துக்கொண்டே இருந்தால் வேலைக்கு எப்போது போவது. படித்து முடித்துவிட்டு எங்கே செல்வது எனத் தெரியாமல் இருக்கக்கூடாது. அதற்கு நாடு மாறவேண்டும். 

பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் என்னை செல்லவிடாமல் தடைகள் போடப்படுகின்றன. நான் சென்றால் மாணவர்களுக்கு அரசியலை புரிய வைத்துவிடுவேனோ என்ற பதட்டம் பல பேருக்கு இருக்கின்றது. நான் கல்லூரிக்கு போவதை தடை செய்யலாம். ஆனால் கற்பதைத் தடைசெய்ய முடியாது. பொன்னாடைகளை தவிர்க்கிறோம், காலில் விழுவதை தவிர்க்கிறோம். இதெல்லாம் மக்கள் நீதி மய்யத்தின் மேடையில் நடைபெறாது. நடைபெற்றால் தடுப்போம்.” என்றார். 

பின்னர் ஒரு மாணவி எழுப்பிய நீட் தேவையா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “உங்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. அது, யாருக்குமே இல்லை என்பது தான் சரியான பதில். காரணம் நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தாம். நாம் என்பது தமிழகத்தை சொல்கிறேன். தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது” என்று கூறினார்.

பல நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியின் போது பேசியிருந்த ரஜினிகாந்த், மாணவர்கள் படியுங்கள், அரசியல் என்பதை தெரிந்துகொண்டு குழப்பம் அடையாதீர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com