விஷால் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சேரன் உறுதி

விஷால் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சேரன் உறுதி

விஷால் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சேரன் உறுதி
Published on

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவினை விஷால் நேற்று தாக்கல் செய்தார். இதனிடையே விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய சேரன், “ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதும், அவரின் பல தொடர் நடவடிக்கைகளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் வகையில் உள்ளது. இது எதிர்காலத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கும். இதனால் தயாரிப்பாளர்களின் நிலை மட்டுமல்லாமல் திரை உலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும். அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் விஷாலின் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுவிட்டு இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சேரன் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்று 2வது நாளாக சேரன் தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விஷால் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சேரன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, உள்ளிருப்பு போராட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு சேரன் தரப்பு சார்பில் ஆயிரம் விளக்கு போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com