‘இப்ப கர்நாடக தூதுவர், அப்ப கொடிப்பறக்குதா?’ - பாரதிராஜாவுக்கு ஆனந்தராஜ் கேள்வி
ரஜினியை தற்போது விமர்சிக்கும் பாரதிராஜா, அவரை வைத்து ‘கொடிப்பறக்குது’ தலைப்பில் அன்று ஏன் படமெடுத்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து ஐபிஎல்-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மறுநாள் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு, சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது, நாட்டிற்கு பேராபத்து என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாரதிராஜா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் நடிகர் ஆனந்த ராஜ் உள்ளிட்ட சிலர் ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை, ஆனந்தராஜ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினியின் கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. நடிகர்கள் சமீபத்தில் நடத்திய மவுன விரதப் போராட்டத்தில் தான் பேச முடியாது என்பதால், நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே ரஜினி செய்தியாளர்களிடம் தனது கருத்தை தெரிவித்துவிட்டார். அந்த மாண்பு மிகவும் பிடித்து இருந்தது. ரஜினியை சிலர் குறிவைத்து செயல்படுவதாக எனக்கு தெரிகிறது. சில அமைப்புகள் அவருக்கு எதிராக திரும்புகின்றன. தற்போது ரஜினியை கர்நாடக தூதுவர் என்று சொல்லும் பாரதிராஜா, அன்று ரஜினிக்கு ‘கொடிப்பறக்குது’ என்ற டைட்டில் சரி வராது எனக் கூறி ‘பரதேசி’ என்ற டைட்டில் வைத்திருக்க வேண்டியது தானே?’ என்று கேள்வி எழுப்பினார்.