அராஜகத்தில் ஈடுபடும் பசுப்பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை - சிவசேனா வலியுறுத்தல்
பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்னை குறித்து தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டிருந்ததை சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா விமர்சித்துள்ளது. துப்பாக்கி குண்டுகளால் அல்லது அவர்கள் மீது பழி சொல்லுவதால் காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாது. காஷ்மீர் மக்கள் மனம் மாறினால் மட்டுமே இந்த பிரச்சனை தீரும்' என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து சாம்னா "காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து 370-ஐ நீக்க வேண்டும். மத்திய அரசு எடுக்கும் இந்த முடிவுக்கு காஷ்மீர் மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். காஷ்மீர் பிரச்னையும் நிரந்தரமாக தீர்க்கப்பட்டு விடும். நாட்டில் இப்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே காரணம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்துக்களும் வன்முறைகளில் ஈடுபட தொடங்கி விட்டதாக தெரிகிறது. அவர்களுக்கு வெறுமனே எச்சரிக்கை மட்டும் விடுப்பது போதாது. பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என கூறியுள்ளது.