ஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா? கொஞ்சம் பராமரிக்கவும் வேணும்ல!

ஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா? கொஞ்சம் பராமரிக்கவும் வேணும்ல!
ஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா? கொஞ்சம் பராமரிக்கவும் வேணும்ல!

சிலருக்கு ஏஸி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இங்கு பிரச்னையே நாம் ஏஸியைப் பயன்படுத்துவதோடு சரி.. அதனை முறையாக பராமரிப்பதில்லை. ஏஸியை ஒழுங்காக பராமரிக்காததால் தீப்பிடிப்பது, வாயு கசிவது போன்ற விபரீதங்களும் நேரிடக்கூடும். ஏஸியை எப்படி பராமரிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

எல்லா பொருள்களுக்கும் ஓய்வு அவசியம். 24 மணி நேரமும் ஏஸியை பயன்படுத்துபவர்களும் உண்டு. அது முற்றிலும் தவறு. தொடர்ந்து 8 மணி நேரம்தான் ஏஸியை பயன்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில் இடைவெளி விட்டாவது பயன்படுத்த வேண்டும். 

மூன்று மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக ஏஸியை பயன்படுத்துவோர் ரிமோட்டில் அணைப்பதோடு நிறுத்தி கொள்கின்றனர். ஸ்டெப்லைசரை அணைப்பதில்லை. அதுவே நீண்ட நேரம் சூடாகி தீ பிடிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. 

ஏஸி ஓடிக்கொண்டிருக்கும் போது பர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகியவற்றை வாசனைக்காக ஏஸியின் மீது அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.

மேலும் கைதேர்ந்த மெக்கானிக்கை அழைத்து பழுதுபார்ப்பது நல்லது. எப்படி சரிசெய்கிறார், சரிசெய்தபின் நன்றாக இயங்குகிறதா என அவர் முன்பே பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டும். 

ஏஸியால் பல உயிர் சேதங்கள் கூட ஏற்பட்டுள்ளது. ஏஸியில் 410A, R32, R22 என மூன்று வாயுக்கள் உள்ளன. அவை வெளியேறினால் ஆபத்துதான். இந்த விஷயத்தை பொருத்தவரை ஏஸியை பொருத்தும் மெக்கானிக் கவனமாக இருப்பது அவசியம். 

விலை குறைவு என்பதற்காக சாதாரண ஸ்டெப்லைசரை பயன்படுத்தக்கூடாது.  

குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏஸி இருப்பது நல்லது. ஏஸி 90 சதவீத உயர்மின் அழுத்தம் காரணமாகத்தான் பழுதாகிறது. 

கார் ஏஸியிலும் கவனம் செலுத்துவது அவசியம். பயணத்தின்போது மட்டுமே கார் ஏஸியை பயன்படுத்த வேண்டும். சிலர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு ஏஸி போடுவார்கள். அது முற்றிலும் தவறு. 

தொலைதூர பயணத்திற்கு முன்பும் பின்பும் பரிசோதிப்பது அவசியம். காரில் பயணிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளியில் இயற்கை காற்றையும் சுவாசிக்க வேண்டும். அது உடலுக்கும், காருக்கும் நல்லது. மேலும் காரை மரத்தடியிலோ அல்லது மேற்கூரையுள்ள இடங்களில் பார்க் செய்வது நல்லது.  காரில் ஏறியதும் ஏஸியை போடாமல் சிறிது நேரம் கண்ணாடியை இறக்கிவிட வெப்பம் வெளியேறியதும் ஏஸியை பயன்படுத்தலாம். 

அளவோடு குளிரூட்ட வேண்டும்

தொடர்ந்து ஏஸியை பயன்படுத்தினால் கண் எரிச்சல், சருமம் வறண்டு உடல் அரிப்பு போன்ற பிரச்னைகள் வரும். ஏஸியை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால்  'லிஜினல்லா நிமோபிலியா' என்ற பாக்டீரியா வளரும். இது ஏஸியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இந்த வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக நேரம் ஏஸியில் இருப்பவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றும் என மருத்துவர்களும் கூறுகின்றனர்.

ஏஸி காற்று நேரடியாக நம் மூக்கில் பட்டால் மூக்கடைப்பு, சளி போன்றவை எளிதில் வர வாய்ப்புண்டு. ஏஸியை அதன் அதிகபட்சத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் முழு நேரமும் ஏஸியில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் அரை மணி நேரமாவது இயற்கை காற்றிற்காக வெளியில் சென்று வர வேண்டும். வியர்வை வெளியேறுவதை ஏஸி முற்றிலுமாக தடுத்து விடுகிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். 

கவனம் தேவை!

  • ஏஸியை ஜெனரேட்டரிலோ அல்லது இன்வெர்டரிலோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • குளிர்காலத்தில் நீண்ட நாள்கள் பயன்படுத்தாமல் இருந்த ஏஸி, தகுந்த பராமரிப்பிற்கு பின்பே பயன்படுத்தபட வேண்டும்.
  • உயர் மின் அழுத்ததை தாங்கும் கேபிள், ஸ்விட்சுகளை பயன்படுத்த வேண்டும்.
  • பெரிய அறைக்கு குறைந்த செயல்திறன் கொண்ட ஏஸியை பயன்படுத்தக்கூடாது.
  • வீடுகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
  • விடுதிகளில் 2 மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com