கேரள மாநிலம் கண்ணூரில் ஏபிவிபி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கூத்துபரம்பா பகுதியை சேர்ந்தவர் சாம் பிரசாத் (24). இவர் பெரவூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழிற்கல்வி கற்று வருகிறார். அகில பாரத வித்யார்த்தி பர்ஷித் அமைப்பின் அப்பகுதி நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சாம் பிரசாத்தை, கொம்மேரி என்ற இடத்தில் முகமூடி அணிந்தவாறு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த படுகொலை சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை துவக்கியுள்ள நிலையில், படுகொலையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை நடக்கும் 12 மணி நேர முழு அடைப்பில், பொதுமக்களின் சிரமம் தவிர்க்க வாகன போக்குவரத்திற்கு இடயூறு இருக்காது என போராட்டக்குழு அறிவித்துள்ளது. கண்ணூரில் தொடர்ந்து நடக்கும் கொலை சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.