நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு... திண்டுக்கல்லில் சோகம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவூர் நீர்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதன் புரத்தை சேர்ந்தவர் மணி. இவரின் நண்பர் ஒருவர் புதிதாக செல்போன் வாங்கியதற்காக பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்டிக்கு, மணி தனது ஐந்து நண்பர்களுடன் கொடைரோடு அருகே உள்ள மாவூர் நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தனது நண்பர்களுடன் அணையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த மணி, திடீரென ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கி மாயமானார். அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் மணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது நீர்த் தேக்கத்தின் மேற்பரப்பில் மணியின் உடல் மிதந்தது. உடலை கைப்பற்றிய அம்மையநாயக்கனூர் போலீசார் மணியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கிய பார்ட்டிக்காக சென்றவர் நீர்தேக்கத்தில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.