நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர்... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
மன்னார்குடியில் நண்பர்களுடன் ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ ராஜவீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரின் மகன் அப்துல் காதர். 10-ஆம் வகுப்பு படித்துவரும் இவர், இன்று மதியம் தனது நண்பர்கள் நான்கு பேருடன் பாமணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட நீர் சுழலில் சிக்கிய அப்துல் காதர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
அப்துல் காதர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மன்னார்குடி தீயணைப்புத்துறையினர் சுமார் இரண்டுமணி நேரமாக போராடி இறந்த நிலையில் அப்துல் காதரின் உடலை மீட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனர்.