ஊட்டியில் லஞ்சம் வாங்கும்போது சிக்கிய வருவாய் உதவி ஆய்வாளர் !
உதகை நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் பகுதியில் பிரபு என்பவர் கட்டிய புது வீட்டிற்கு அளவீடு செய்ய 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சத்திய ஆரோக்கிய நாதன் என்பவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாட்டத்தில் உள்ள உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில் உதகை நகராட்சிக்குட்பட்ட தீட்டுக்கள் பகுதியில் வசித்துவரும் பிரபு என்பவர் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
அந்த வீட்டிற்கு நகராட்சி சார்பில் நில அளவீடு செய்ய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சத்திய ஆரோக்கிய நாதன் என்பவர், 15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். இதனையடுத்து பிரபு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் இன்று மாலை வருவாய் உதவி ஆய்வாளர் சத்திய ஆரோக்கிய நாதனிடம் ரூபாய் 15 ஆயிரம் லஞ்ச பணத்தை பிரபு வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சத்திய ஆரோக்கிய நாதன் உதகை நகராட்சிக்குட்பட்ட பல வீடுகளுக்கு நில அளவீடு செய்ய இது போன்று பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.