நீட் தேர்வை இன்று வைத்தாலும் எழுத தயார்: தமிழிசை
நீட் தேர்வை இன்று வைத்தாலும் அதை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கு இருக்கிறது என பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
நீட் தேர்வுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பழங்கா நத்தத்தில் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் நீட்-ஐ வைத்து ஆதாயம் தேடுவதற்காக அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினர்.
காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்று நீட் தேர்வு வைத்தாலும் அதை சந்திக்கும் தெம்பும் திராணியும் எனக்கு உள்ளது என்றார். திமுக எத்தகையப் போராட்டத்தை நடத்தினாலும் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று தமிழக இளைஞர்கள் கூற மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.