”கொரோனா விதிமுறை என்ற பெயரில் அபராதம் விதிக்கிறார்கள்”.. வாலிபர் தீக்குளிக்க முயற்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் விதிமுறைகளை பின்பற்றும் கடைக்கும் அபராதம் விதித்து தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி சேலத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பகுதியில் பிரதீப் என்ற வாலிபர் தேநீர் கடையுடன் கூடிய உணவகம் நடத்தி வருகிறார். இவர் இன்று பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் இருந்த காவல்துறையினர் உடனடியாக வாலிபரை சுற்றி வளைத்து அவர்மீது தண்ணீர் ஊற்றினர்.
பிரதீப்பின் இந்த நடவடிக்கை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் அவ்வப்போது அபராதம் விதிப்பதாகவும், கடையில் முறைப்படி தனிமனித இடைவெளி உள்ளிட்ட அனைத்து வகையான விதிமுறைகளை பின்பற்றியும் இந்த அபராதம் நடவடிக்கை பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து உள்ள நிலையில் இந்த நடவடிக்கையால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப் படுவதாலேயே மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொள்ள முயற்சித்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் பிரதீப்பை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் அதிகாரிகள் இதுபோன்று நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் தான் விதிகளை முறையாக பின்பற்றி வந்தநிலையில் அபராதம் விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே பிரதீப்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)