மஞ்சள் உடையும், விசில் சத்தமும் - சிஎஸ்கே ரசிகனின் கடிதம்..!

மஞ்சள் உடையும், விசில் சத்தமும் - சிஎஸ்கே ரசிகனின் கடிதம்..!
மஞ்சள் உடையும், விசில் சத்தமும் - சிஎஸ்கே ரசிகனின் கடிதம்..!

அன்பு சிஎஸ்கே, ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்தே நான் உன் ரசிகன். என்னை நீ ஏமாற்றியது இல்லை. கோப்பைகளை வாங்கி மகிழ்ச்சியில் நீ திளைக்க வைத்தாய். மஞ்சள் உடை, விசில் சத்தம் என ஐபிஎல் திருவிழாவை நான் கொண்டாடியே தீர்த்திருக்கிறேன். ஐபிஎல் என்றாலே சென்னையுடன் ஏதோ ஒரு அணி ஃபைனலில் மோதும் என்ற மீமை பரபரப்பாய் பகிர்ந்திருக்கிறேன். பயிற்சி என்று சேப்பாக்கத்திற்கு நீங்கள் வந்தால் அங்கு கூடித்திளைக்கும் எத்தனையோ ரசிகர்களின் நானும் ஒருவன்.

உனக்கு தெரியுமா? இடையே இரண்டு வருடம் இடைவெளி விட்டபோதுகூட நான் ஐபிஎல்-ல் அவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அந்த மஞ்சள் உடை என் மனதோடு ஒன்றி இருந்ததுதான் காரணம். அந்த மஞ்சள் உடை இல்லாத தோனியிடமும் ஏதோ குறைவதாகத்தான் இருந்தது. இது வயதான அணி என்று சக நண்பர்கள் கலாய்த்தபோதெல்லாம் மூச்சு முட்ட உனக்காக பேசி இருக்கிறேன். என் பேச்சுக்கு வலுசேர்ப்பதாய் நீயும் அதிரடி காட்டி இருக்கிறாய். சிஎஸ்கே என்றாலே நாங்கள் பிளே ஆஃபுக்கு பிறகுதான் யோசிப்போம். இந்தமுறை எல்லாமே மாறி கிடக்கிறது. இந்த முறை ஐபிஎல்-ஐ நாங்கள் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்த்தோம்.

அதற்கு தோனி தான் காரணம். கிரிக்கெட்டைவிட்டு ஒதுங்கிவிட்ட அவர் ஐபிஎல் மூலமே மைதானத்தில் இறங்கினார். முன்னதாகவே சென்னை வந்து பயிற்சி தொடங்கியபோது எங்களுக்கு கொரோனா அலுப்பு கொஞ்சம் ஓரம் சென்றது. ரெய்னா, தோனி என மஞ்சள் உடையில் எனக்கு பிடித்த வீரர்களை பார்த்தபோது எனக்குள் ஏதோ உற்சாகம். இப்படி எதிர்பார்ப்பாய் இருந்தபோது ரெய்னா விலகிச் சென்றார். ஏதேதோ உள்பிரச்னை என்றார்கள். ஆனாலும் தொடங்கிய ஐபிஎல்ன் முதல் போட்டியில் உற்சாகம் குறையாத வெற்றி. அதுவும் மும்பைக்கு எதிராக. ஆனால் அதற்குபின் என்ன ஆனது சிஎஸ்கேவுக்கு என்பது தான் புரியவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுவிட்டோம் நாங்கள். மீண்டும் விக்கெட்டை விடாமல் ஒரு ஆட்டம் வெற்றிபெற்று திரும்பி வந்துவிட்டது எங்கள் அணி என சொல்ல வைத்தீர்கள். ஆனால் மீண்டும் அதள பாதாளம்.

எதிர்பார்த்த வீரர்கள் சொதப்பினார்கள். அணியில் மாற்றமில்லை. சொதப்பும் வீரர்களை ஆடவைத்தார் தோனி என பலப்பல பேச்சுகள். முரளிவிஜய் சொதப்பினார், கேதவ் ஜாதவ் சொதப்பினார் என தனி ஆட்கள் மீது குற்றம் சொன்னாலும் பிரச்னை என்னவோ அணியில் உள்ளதாகவே படுகிறது. எதிரணி 230 என்றால் 200 வரை செல்கிறீர்கள். 140 என்றால் 120வதில் நிற்கிறீர்கள். சிஎஸ்கே என்றாலே கடைசி நேர பரபரப்பு, பிபி மாத்திரை என்றெல்லாம் சொல்வதுண்டு.. அதெல்லாம் இப்போது இல்லை. நிச்சயம் தோல்வி என்ற எண்ணம் எப்போதோ வந்து சீக்கிரம் தூங்க சென்றுவிடுகிறோம்.

அடுத்த மேட்ச், அடுத்த மேட்ச் என வெற்றிக்காக காத்திருந்த எங்களுக்கு ஒருவித சலிப்பு வந்துவிட்டது. இந்த முறை பிளே ஆஃப்க்கு செல்வீர்களா என்பது கூட சந்தேகமாகிவிட்டது. அதிரடி, பரபரப்பு என சீறிப்பாய்ந்த சிங்கம் சிஎஸ்கே இன்று அனைவரிடத்திலும் அடிவாங்கிக் கிடப்பதை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. முழு நம்பிக்கை தோனி கூட, சிஎஸ்கே என்ற கப்பலில் தொடர்ந்து ஓட்டை விழுவதாக மனம் நொந்துவிட்டார்.

உண்மைதான். இந்த தொடர் தோல்விகளால் நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். வருத்தம் அடைகிறோம். ஆனால் சிஎஸ்கே ரசிகன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கடைசிவரை மஞ்சள் உடையும், சிஎஸ்கே வீரர்களுமே என்னுடைய தேர்வு. எத்தனையோ வெற்றிகளை கொடுத்த உன்னை ஒரு தோல்விக்கெல்லாம் வெறுத்துவிடமுடியாது. மீண்டு வரும் பக்குவமும், அதற்கான வீரர்களும் உன்னிடத்தில் உண்டு. என்றுமே ஆச்சரியம் காட்டும் சிஎஸ்கே இனிவொரு ஆச்சரியத்தை அள்ளிக்கொடுக்குமா என்றுதான் காத்திருக்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் முழு உழைப்பை கொடுங்கள். கப்பலின் ஓட்டைகளை அடைங்கள். எனக்கு தெரியும். நீ அவ்வளவு சீக்கிரம் மூழ்கிவிடும் கப்பல் அல்ல... நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.. மீண்டு வா...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com