அதிமுக Vs திமுக Vs மக்கள் நீதி மய்யம்... தேர்தல் வாக்குறுதிகள் - ஒரு பார்வை

அதிமுக Vs திமுக Vs மக்கள் நீதி மய்யம்... தேர்தல் வாக்குறுதிகள் - ஒரு பார்வை
அதிமுக Vs திமுக Vs மக்கள் நீதி மய்யம்... தேர்தல் வாக்குறுதிகள் - ஒரு பார்வை

மக்கள் பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்பது கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் மூலம் தெரிய வரும். அந்த வகையில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்த ஒப்பீடு இது...

* சட்டப்பேரவை தேர்தலில் கதாநாயகனாக இருப்பவை, கட்சிகள் வெளியிடக்கூடிய தேர்தல் அறிக்கைகள். இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை தங்களின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளன. இதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுமென அதிமுக அறிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என திமுகவும், வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லதரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3000 ரூபாய் வழங்குவோம் என மக்கள் நீதி மய்யமும் வாக்குறுதி அளித்துள்ளன.

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அதிமுகவும், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் டேப்லெட் வழங்கப்படும் என திமுகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 இன்ச் டேப் விலையில்லாமல் வழங்கப்படும் என மநீம-வும் தெரிவித்துள்ளது.

* UPSC, NEET, IIT-JEE, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கும் பயிற்சியளிப்பதற்கான மையங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று திமுக வாக்குறுதி தந்துள்ளது. இதேபோன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு பணி தேர்வுகளுக்கு புதிய தகவல் தொழில்நுட்பம் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என மநீம கூறியுள்ளது.

* அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணாக்கர்களுக்கும் நாள்தோறும் 200 மில்லி பால் வழங்கப்படும் என அதிமுகவும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணாக்கருக்கு காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று திமுகவும் அறிவித்துள்ளன. மக்கள் நீதி மய்யம் சத்துணவு திட்டத்தில் பால், பழம், காய்கறிகள், முட்டை வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

* மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று மூன்று கட்சிகளுமே அறிவித்துள்ளன.

* ஊடகவியலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என திமுகவும், பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும் என அதிமுகவும் உறுதி அளித்துள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு பசுமை வீடு கட்டித்தரப்படும் என மநீம கூறியுள்ளது.

* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அதிமுக மற்றும் மநீம அறிவித்துள்ளன. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

* மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை ரத்து செய்யப்படும் என திமுக கூறியுள்ள நிலையில், நீட்டுக்கு பதிலாக மாநில அரசின் பாடத்திட்டத்தில் சீட் தேர்வு நடத்தப்படும் என மநீம கூறியுள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமென அதிமுக தெரிவித்துள்ளது.

* திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அனைத்து ,மாநகராட்சிகளிலும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மநீம கூறி இருக்கிறது.

* முதியோர், மாற்றுத்திறனாளிகள் மாத உதவி தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அதிமுகவும், ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என திமுகவும், 3,000 ரூபாயாக வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யமும் அறிவித்துள்ளன.

* ஏற்கெனவே அரசு அம்மா உணவகம் நடத்தி வரும் நிலையில், கலைஞர் உணவகம் உருவாக்கப்படுமென திமுக கூறியுள்ளது. அதே வேளையில் மக்கள் நீதி மய்யமோ, நியாயமான விலையில் பல்வேறு பொருட்களும் கிடைக்கும் வகையில் ராணுவ கேண்டீன் போல மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com