ரவுடி துரைமுத்து உடலை வீச்சரிவாளுடன் அடக்கம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு!
தூத்துக்குடி அருகே காவலரை கொன்ற ரவுடி துரைமுத்து உடலை வீச்சரிவாளுடன் அடக்கம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார் அளித்த பேட்டியில், ‘’வல்லநாடு அருகே மணக்கரையில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வீசியதில் இறந்த ரவுடி துரைமுத்துவின் உடல், அரிவாளுடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
ஜாதி ரீதியாக மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். மேலும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.