அரவக்குறிச்சியில் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
கமலின் நாக்கினை அறுக்க வேண்டும் எனும் அளவிற்கு அவர் காட்டமாக பேசினார். தேசிய அளவிலும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமலின் பேச்சினை கண்டித்தார். பாஜக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திக உள்ளிட்டோர் கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமலுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் மதரீதியாக பகைமையை தூண்டுவதாக சட்டப்பிரிவு 153A மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சட்டப்பிரிவு 295A ஆகிய பிரிவுகளில் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் விக்கரமன், மத, இன, சாதி உணர்வை தூண்டும்விதமாக பேசுவோர் மீதும் தேர்தல் விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.